கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது - THAMILKINGDOM கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது - THAMILKINGDOM
 • Latest News

  கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது

  விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க முடிவெடுத்திருப்பதாக இலங்கை அரசு முதன்முறையாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

  குமரன் பத்மநாதனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுமீதான நேற்றைய விசாரணையின்போது இலங்கை அரசின் வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்தார்.

  இந்த வழக்கின் மனுவில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய வழக்கு விசாரணையின்போது அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

  இந்த புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறுகள் இலங்கைக்குள் மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்திருப்பதாக தெரிவித்த இலங்கை அரசதரப்பு வழக்கறிஞர், இவை குறித்து விசாரணை செய்வதற்கு குறைந்தபட்சம் ஆறுமாத கால அவகாசம் அளிக்கும்படி நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

  இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 தேதி வரை ஒத்திவைக்க தீர்மானித்தது. அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறு நீதிபதி அரச தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

  குமரன் பத்மநாதன் சர்வதேசரீதியில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பல குற்றங்களை புரிந்துள்ளதாக கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறிப்பிட்டு வந்தபோதிலும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

  எனவே குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கோரி காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கே.பியை விசாரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top