13 இற்கு அப்பால் செல்ல வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் விரைவான முழுமையான அமுலாக்கமும் அதற்கு அப்பால் செல்லும் செயற்பாடும் தீர்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நியாயம், கௌரவம் மற்றும் சமாதானத்துடன் வாழ் வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுடனும் நாம் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சிறப்பான எதிர்காலத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உதவி செய்வோம். இலங்கையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான புதிய பயணத்திற்கு இந்தியா தனது உதவியை வழங்கும் என் றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
இந்த அழகான நாட்டுக்கு வருகை தர கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களுடைய சிறப்பான வரவேற்பு மற்றும் நட்பினால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதானது மிகவும் முக்கியத்துவமானதாகும்.
மகிழ்ச்சியடைகின்றேன்
கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்ற ரீதியில் முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அந்த வகையில் மிகவிரைவில் இலங்கை வரக்கிடைத்தமைக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இது அயல்நாட்டவர்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென்பதற்கு உதாரணமாகும்.
அடிக்கடி விஜயங்கள்
நாம் வழமையாக சந்தித்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். இது எம் ஒவ்வொருவரையும் நாம் புரிந்து கொள்வதற்கு சிறப்பாக உதவும், பஸ்பர விவகாரங்களுக்கு தீர்வு காணவும், நட்பை மேலும் முன்கொண்டு செல்லவும் இது உதவும். இதனைத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் மூலம் உணர்ந்தேன். எமது இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பொருளாதார தொடர்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தடைகளை குறைக்கும்
எமக்கிடையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது எமது அர்ப்பணிப்பு, பலமான பொருளாதார கூட்டுறவு என்பவற்றை பிரதிபலிக்கின்றது. கடந்த 10 வருடங்களில் எமது இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்தியாவுடனான உறவு தொடர்பில் உங்களுடைய கரிசனையை நான் அறிந்திருக்கின்றேன். இதனை நாம் ஆராயவேண்டும். சுங்க அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து இன்று நாம் செய்த ஒப்பந்தம் ஒரு முற்போக்கான விடயமாகும். இது தடைகளை குறைப்பதாக அமையும்.
சந்தர்ப்பங்களை பார்க்கின்றோம்
நாம் வெறுமனே பிரச்சினைகளை ஆராய்வதை மட்டும் முன்னெடுக்காமல் புதிய சந்தர்ப்பங்கள் குறித்தும் நாங்கள் அவதானிக்கின்றோம். இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனமும் சீனன்குடாவில் உயர் தாங்கி ஒன்றை உருவாக்குவதற்கு இனங்கியுள்ளன. பரஸ்பரம் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாதிரிகளை ஆராய்வதற்கு ஒன்றிணைந்த செயலனியொன்று உருவாக்கப்படவுள்ளது.
திருகோணமலையை பிராந்திய கேந்திரமாக மாற்ற உதவுவோம்
திருகோணமலையை இந்தப் பிராந்தியத்தில் பெற்றோலிய வளக்கேந்திர நிலையமாக உருவாக்குவதற்கு இந்தியா உதவ தயாரக இருக்கின்றது. மேலும் சாம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான களநிலைகளை ஆராய்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம். இது இலங்கையின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கும்.
செயலணி
கடல்சார் பொருளாதாரம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இது இரண்டு நாடுகளும் முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயமாகும். கடல் பொருளாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஒன்றிணைந்த செயலணியை நியமிப்பதற்கு நாம் எடுத்த முடிவு மிகவும் முக்கியமானது.
318 மில்லியன் டொலர் உதவி
இளைஞர் விவகாரங்கள் தொடர்பிலும் நாம் இரண்டு நாடுகளுக்கிடையில் உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளோம். இலங்கையில் அபிவிருத்தி பங்களாராக இருப்பதில் இந்தியா சிறப்புப் பெறுகிறது. இலங்கையின் ரயில் பாதைகளை தரமுயர்த்துவதற்கு 318 மில்லியன் அமெரிக்க டெலர் கடன் உதவியை வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. மேலும் மாத்தறை பல்கலைக்கழகத்தின் ரவிந்திரநாத் தாகூர் கேட்போர் கூடம் ஒன்றை அமைப்பதற்கும் நாம் உதவி வழங்கவுள்ளோம்.
வடக்கு விஜயம்
நாளை (இன்று) இந்திய வீட்டுத் திட்டத்தை பார்வையிடுவதற்கு செல்லவுள்ளேன். இந்திய வீட்டுத்திட்டத்தில் 27 ஆயிரம் வீடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் ரூபாவை நிலையாக பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியும் இந்திய ரிசவ் வங்கியும் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளன.
மீனவர் விவகாரம்
நாங்கள் மீனவர் விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த குழப்பகரமான விவகாரம் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் என்பவற்றை உள்ளடக்கியது. இதை இந்தக்கோணத்தின் அடிப்படையிலேயே நாம் கையாளவேண்டும். ஆனால் இதற்கு ஒரு நீண்டகால தீர்வையும் தேட வேண்டிய தேவையும் எமக்கு இருக்கிறது. எனவே இலங்கை, மற்றும் இந்திய நாடுகளின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய இனக்கப்பாட்டிற்கு வருவதே சிறந்தது. அந்த முடிவை இரண்டு அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ளும்.
உதவுவோம்
மேலும் இலங்கையின் சிறப்பான எதிர்காலத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உதவி செய்வோம். இலங்கையின் சமாதானத்திற்கான நல்லிணக்கணக்கத்திற்கான முன்னேற்றத்திற்கான புதிய பயணத்திற்கு இந்தியா தனது உதவியை வழங்கும்.
நல்லெண்ணம்
மேலும் இந்தப் பிராந்தியத்தின் சமாதானம், சிறந்த எதிர்காலம், கடல்சார் செயற்பாடுகளிலும், நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். எமது இன்றைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த சந்திப்பு எமக்கு சிறந்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் எதிர்கால உறவு விடயத்தில் வழங்கியுள்ளது.