Breaking News

ஆயுதக் களஞ்சிய விசாரணையை நிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம் - ராஜித

காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க, குறிப்பிட்ட கடல் பாதுகாப்பு நிறுவனம் முயன்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அவன்ட் கார்டே என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், கடந்த ஜனவரி மாதம் குற்றப்புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

அந்த ஆயுதக்களஞ்சியம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அந்த விசாரணைகளை இடைநிறுத்துவதற்காக, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க முன்வந்துள்ளது குறிப்பிட்ட நிறுவனம்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகி, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த முதல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அந்த அமைச்சர், இலஞ்சத்தைப் பெற மறுத்து விட்டார்.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படாது போனால், இரண்டு வாரங்களுக்குள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பான விபரங்களைப் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப் போவதாகவும் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஊழல் செய்தவர்களைத் தண்டிக்காதது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எல்லா குற்றவாளிகள் பற்றிய விபரங்களையும் தாம் வெளியிடப் போவதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.