Breaking News

மஹிந்தவை விசாரணை செய்ய மேற்க்குலக நாடுகளின் உதவியை கோரும் இலங்கை!

முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர், இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, விசாரணைகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

“உலக வங்கி, அமெரிக்க நீதித் திணைக்களம், லண்டனில் உள்ள முக்கியமான மோசடி விசாரணை அலகு மற்றும் இந்திய மத்திய வங்கி ஆகியவற்றிடம் நாம் உதவி கோரியுள்ளோம். ஊழல் தொடர்பாக முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களைக் கைது செய்யவில்லை என்று, அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

இறுதியான ஆதாரங்கள் கையில் இல்லாமல், எவரையும் கைது செய்ய முடியாது. இது கொலை தொடர்பான ஒரு விசாரணையைப் போலல்ல. எமக்கு கால அவகாசம் தேவை. இந்த விசாரணைகளின் முக்கிய பகுதி எதிர்வரும் ஏப்ரல் 23ம் நாளுக்குள் முடிவுறும் என்று அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.