இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட 6 தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழரசுக்கட்சி
இனப்பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசு தீர்வு காணவேண்டும் என்பது உட்பட இலங்கை தமிழரசுக்கட்சி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
இனப்பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசு தீர்வு காணவேண்டும் என்பது உட்பட இலங்கை தமிழரசுக்கட்சி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.வவுனியா வைரவபுளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே தீர்மானங்கள் வாசிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் அங்கு மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை ஆராய்ந்து,
1. தமிழர்களின் காணிகளை மீள் கையளித்தல்
2. அரசியல் கைதிகளை விடுவித்தல்
3. காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி உடனடியாக இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கமாறு அரசை கேட்டுக்கொள்கின்றது.
4. போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகின்றது.
5. இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும்.
6. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்புமேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினாகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டடிருந்தனர்.