இந்த வாரம் ஜெயகுமாரிக்கு விடுதலை!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தவாரம் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருக்கும், பாலேந்திரன் ஜெயகுமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு ஆண்டுக்கு முன்னர், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி, பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரையும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரி வருகின்றன. இந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
275 அரசியல் கைதிகளில், விடுதலை செய்யப்படக் கூடியவர்களின் பட்டியல் ஒன்றை இலங்கை சட்டமா அதிபர், அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இந்தியப் பிரதமரின் பயணத்தின் போது, பாலேந்திரன் ஜெயகுமாரியை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்யக் கூடும் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.