Breaking News

அனுரதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் துன்புறுத்தல்!

அனுரதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுரதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நீதி மன்ற விசாரணைக்களுக்காக நேற்று வவுனியா உயர்நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அங்கு நீதிபதியின் முன் மேற்படி விடயம் தொடர்பில் கைதிகளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர்களை நீதிமன்றில் பார்வையிடுவதற்காக சென்றிருந்த குடும்ப அங்கத்தினர் தெரிவித்தனர்.

அவ்வாறு முறைப்பாடு செய்தமையினால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் குறித்த அனுரதபுரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட அரசியல் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

அத்துடன், அவர்களுக்காக எடுத்துச் சென்றிருந்த உணவுப் பொருட்களையும் குடும்ப உறவினர்கள் வழங்க விடாது கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி துரத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது. மாலை வேளை வரை உறவினர்கள் வீதியில் கண்ணீரோடு நின்று மன்றாடிய போதும் ஈவிரக்கம் ஏதுமின்றி கைதிகள், தமது உறவினர்களை பார்வையிட அனுமதி மறுத்து விட்டதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

அனுரதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை வவுனியாவுக்கு அழைத்து வந்திருந்த சிறை அதிகாரிகளே மேற்படி சித்திரவதைகளை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.