Breaking News

புலிகளின் மீதான தடை கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையானது கடந்த அரசாங்கத்தின் சிலருக்கு பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனின் சொத்துக்களைக் கொண்டு செல்வந்தர்களாக காத்திருந்தவர்கள் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்றே விரும்பினார்கள்.

எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க வேண்டுமென வலியுறுத்தினார். பிரதமரின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு தடையை விதித்துள்ளது. கடந்த அரசாங்கம் உரிய முறையில் புலிகளுக்கு எதிரான தடை நீடிப்பிற்கு முயற்சிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க, நாட்டை நேசித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குமரன் பத்மநாதன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குமரன் பத்மநாதன் பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.