ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்!
புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
உள்ளக ரீதியாகவும், சர்வதேச மட்டத்திலும் புதியதொரு கோணத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இதன்போது ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார்.
இதேவேளை, பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேராவையும், ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யுத்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை ஜெப்ரி பெல்ட்மன் தெளிவுபடுத்தியதாக பதில் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம், நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரையும் ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐநா அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.