Breaking News

தேர்தல் வாக்குறுதியை மறந்துபோனார் மைத்திரி!

தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அரசாங்கத்துக்குள் உள்வாங்கியுள்ளதை அடுத்து, இலங்கையின் அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்ட போது, 11 அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, 14 ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரமுன்னர், அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.

அமைச்சரவையின் எண்ணிக்கை 30 இற்கு மேற்படாது என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறி, 40 பேர் கொண்ட அமைச்சரவை தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்ட ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளுக்குப் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தயவு தேவைப்படுவதாலேயே, தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில், இந்த புதிய அரசு செயற்படத் தொடங்கியுள்ளது.

இந்த அரசாங்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நேற்று 26 பெர் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டாலும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.