Breaking News

இராமேஸ்வர மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வர மீனவர்கள், இன்று முதல் கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

நாளைய தினம் இலங்கை-இந்திய மீனவ சங்கங்களுக்கிடையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த மீனவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் இன்று காலை இராமேசுவரத்தில் மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற உடனே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 54 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று உள்ளனர். இதன் காரணமாக சுமார் 800க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -