Breaking News

இனப்பிரச்சினை தீர்விற்கு கால வரையறை வேண்டும்! ஜனாதிபதியிடம் மாவை கோரிக்கை

இலங்கையின் புதிய அரசு இனப்பிரச்சினைக்கும் தீர்வை ஏற்படுத்துவதற்கு கால வரையறையை நிர்ணயித்து ஐனாதிபதி செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற  வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு உரையாற்றுகையிலையே கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு இன்று முதற்தடவையாக விஐயம் மேற்கொண்டுள்ளமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்கின்றோம். இன்று நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த மாற்றம் தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் பல தரப்பினர்களாலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழின அடையாளங்களை அழித்து தமிழ் மக்களையே இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அதனை தடுத்து நிறுத்துமென்று நம்புகின்றோம்.

மேலும் இங்கு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், இடம்பெயர்நத மக்களின் மீள்குடியேற்றம், அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தல், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவை சேனாதிராசா முன்வைத்தார்.

குறிப்பாக மக்கள் பிரச்சனைக்கு புதிய அரசின் 100 நாள் திட்டம் போன்று இனப்பிரச்சினைக்கும் குறிப்பிட்ட கால வரையறையொன்றை புதிய அரசு நிர்ணயிக்க வேண்டும். ஆந்த காலவரையின் அடிப்படையில் எமது பிரச்சனைக்குத் தீர்வை ஏற்படுத்துவது அவசியமென்றும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.இதன் போது புதிய அரசாங்கம் தற்போது பல்வெறு பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி வருகின்றது. அதனை நாமும் வரவெற்கின்றோம். இதே போன்று எமது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நீண்டகாலமாக இருக்கின்ற இனப்பிரச்சனைக்கும் தீர்வை ஏற்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். எனவும் அவர்  தெரிவித்தார்.