Breaking News

இலங்கை அரசும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது போன்று இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் மீதான தடை இலங்கையில் நீக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைகளினையும் சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியுமெனவும் அவ் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவிக்கையில்;

நாட்டில் போர் முடிவுற்று ஐந்து வருடங்களிற்கு மேலாகின்ற நிலையிலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் கூட இன்னும் தீர்த்து வைக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.மீள்குடியேற்றம்,காணமல் போனோர்,அரசியல் கைதிகள் என அப்பிரச்சினைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளினைக்கூட பெற முடியாத நிலையே இங்கு காலம் காலமாக இருந்து வருகின்றது.போரில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித உதவித்திட்டங்கள் இன்றியும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருந்து வருகின்றனர்.அவ் உதவிகளினையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.

தமக்கான உரிமைகள் தேவைகளினை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முற்படும் போது தென்னிலங்கையில் அவற்றை தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு புலிகள் தான் அவற்றை கேட்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.முன்னாள் போராளிகளும் தமக்கான வேலை வாய்ப்புக்களினை பெற முயற்சிக்கும் போது தவறாக அடையாளம் காணப்படுகினர்.தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை இலங்கையில் நீக்கப்பட்டால் தென்னிலங்கையில் அரசியல் செய்பவர்கள் பிரச்சினைகளினை எதிர் நோக்க வேண்டி வரலாம் ஆனால் நாடு முழுவதிலும் ஒரு புரிந்துணர்வினை இத்தடை நீக்கத்திநூடாக அடைய முடியும்.வடபகுதியில் வாழும் தமிழ் மக்கள் புலிகள் என்ற கருத்தினை பொய்யாக்கி தமிழ் மக்களும் ஒன்றுபட்ட நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ முடியும்.

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவதன் மூலம் காணாமல் போகச் செய்யப்பட்டோர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான இழப்பீடு போன்றவற்றினை எந்த எதிர்பின்றியும் கையாள முடியும் இதனை விட இறுதிப்போரில் என்ன நடந்தது என்பதனையும் வெளிக்கொணர்ந்து உண்மையை கண்டறிய முடியும். நல்லிணக்கத்தினை விரும்பும் புதிய அரசு தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கி தமிழ் மக்கள் இந்த நாட்டில் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றியும் வாழ்வதற்கு வழியேற்படுத்த வேண்டும் என்றார்.