Breaking News

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு ஒத்திவைப்பு

காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர், இந்த வழக்கை ஒத்திவைத்தார். மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தமை இவ்வருடம் ஜனவரி 18ஆம் திகதி கண்டறியப்பட்டது.

துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருந்தமை கண்டறியப்பட்டதுடன் அந்த கொள்கலன்கள் அவன்காட் மெரின்டைம் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும்.

ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்திருந்தார். எனினும், அந்த களஞ்சியசாலையிலிருந்து 3,154 ஆயுதங்கள, 747,859 ரவைகள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த களஞ்சிய சாலைக்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த களஞ்சியசாலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து ஆலோசனைகளை பெற்று நீதிமன்றுக்கு முன்வைக்குமாறும் நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணித்தார்.