Breaking News

இலங்கை அணியை துரத்தும் துரதிஷ்டம்

உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணிக்கு வீரர்கள் காயத்துக்குள்ளாவது பெரும் சவாலாக மாறியுள்ளது.


தம்மிக்க பிரசாத், ஜீவன் மெண்டிஸ் , திமுத் கருணாரத்ன , ரங்கன ஹேரத் , சந்திமால் என பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஞ்சலோ மெத்தியூஸீன் குதிக்கால் பகுதியில் காயமேற்பட்டுள்ளதாகவும் , இதனைத் தொடர்ந்து அவருக்கு இன்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியின் போதே அவர் காயமடைந்துள்ளார். மேலும் குறித்த போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் நீண்ட நேரம் களத்தடுப்பில் ஈடுபடவில்லை.

எனினும் இக் காயத்தால் தன்னால் காலிறுதியில் விளையாடமுடியாமல் போகும் என தான் நம்பவில்லையெனவும் மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். மேலும் நிலமையை தொடர்ந்து அவதானிக்கவுள்ளதாக மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வீரர்கள் காயத்துக்கு உள்ளாகி வருகின்றமை இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.இதனால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது அணியின் சமநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

அணியின் பயிற்றுவிப்பாளரான மாவன் அத்தபத்துவும் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார். அணியின் வீரர்கள் மாற்றப்படுவது அணிக்கு பாரிய இழப்பென அத்தபத்து சுட்டிக்காட்டியுள்ளார்.