Breaking News

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் விசேட செயலமர்வு கொழும்பில்!

காணாமல் போனோர் தொடர்பில் முறைப் பாடுகளைப் பதிவு செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு இம்மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

 இந்த செயலமர்வில் பங்கேற்க மன்னார் ஆயர் உட்பட சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். காணாமல் போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடந்த அமர்வு திருகோணமலையில் நடைபெற்றது. 

 இதன்போது சிவில் அமைப்புகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 'குறித்த குழுவின் செயற்பாடுகள் மீது நம்பிக்கையில்லை' என்ற தொனியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அத்துடன், அரசியல்வாதிகள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் குறித்த குழுவின் நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

 மேலும் இந்த நிலையிலேயே, தமது குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் விசேட செயலமர்வை ஜனாதிபதி ஆணைக்குழு கொழும்பில் நடத்தவுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதியில் முறைப்பாடுகளைப் பதிவுசெய்தவர்களுக்கு இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது. 

இம்மாதம் 18ஆம் திகதி காணாமல் போனோர் குறித்த இடைக்கால விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. இதன்பின்னர், ஏப்ரல் 17, 18,19,20 ஆகிய திகதிகளில் அம்பாறையில் உள்ளக விசாரணைகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.