மைத்திரியின் யாழ் வருகை! ஒரு சுவாரஷ்ய பதிவு
மாற்றத்திற்குப் பின்னரான புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய கன்னி பயணத்தின்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் விரைவில் தீர்த்துவைப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
சுமார் மூன்று மணிநேரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த அவர் வடக்கில் நடக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடும் மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் கலந்துகொண்டார். வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சியினர், சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர், யாழ்ப்பாணத்து புலமையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
முன்வரிசைக் கதிரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரப்பிக்கொண்டிருந்தனர். அதே வரிசையில் சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் அமர்ந்திருந்தார். யாழ்.மாவட்ட ஐ.தே.க நாடாறுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் கதிரை அவர் கூட்டத்திற்கு சமூகளித்திராத காரணத்தினால் அங்கஜனுக்கு கொடுக்கப்பட்டதாம்.
இப்படியே எல்லோரும் தண்ணீர் போத்தல்களால் எறிபடாமல், மங்களகரமாக யாழ். மாவட்டச் செயலக மண்டபத்தை நிறைத்திருக்க காலை 10.05 மணிக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது. அதில் ஜனாதிபதி சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
“நான் முன்னர் யாழ்ப்பாணத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்குக் கேட்டு வந்தேன். ஆனால் இன்று ஜனாதிபதியாக வந்துள்ளேன். என்னை வெற்றியடையச் செய்தமைக்கு வடக்கு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
இதைச் சொன்னதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உற்சாகமாகக் கை தட்டினர். வழமையாகக் கைதட்டும் டக்ளஸ் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். கைதட்டல் ஓய்ந்ததும் மீண்டும் பேச்சைத் தொடங்கினார் ஜனாதிபதி, “இந்த நாட்டில் இனம், மதம் என எதுவும் இன்றி மக்களைப் பாதுகாப்பதே எனது நோக்கம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் . அதற்கு நாடாளுமன்றம், மாகாண சபை என்பன இதற்கு முக்கியமான நிறுவனங்களாக உள்ளன. இங்கு உரையாற்றியவர்கள் கல்வி சுகாதாரம், காணிப்பிரச்சினை, நிலவிடுவிப்பு பற்றிக் கூறியுள்ளீர்கள். காணிப்பிரச்சினை தீர்க்க குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பொறுப்பு சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். எனவே யுத்தத்தின் போது இராணுவத்தினால் பெறப்பட்ட காணிகள் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல, கொழும்பிலும் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அலரிமாளிகைக்கு எனவும் எடுத்துக் கொள்ளப்பட்டன” – என காணி அபகரிப்புக்கு எதிரான கதைகளுக்கு ஒரே போடு போட்டார்.
எல்லோரும் உம்மென்று உட்கார்ந்திருந்தனர். இரண்டொரு வசன மொழிபெயர்ப்பின் பின் கிளர்ந்தெழுந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மைத்திரியிடம் ஓடிப்போய் ஏதோ சொன்னார். உடனடியாக வேறொருவரை மொழிபெயர்ப்புக்கு அமர்த்தினர் மைத்திரி.
தொடர்ந்தார் ஜனாதிபதி, “ அந்த நிலங்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். வடக்கு மாகாணத்திற்கு சிவில் ஆளுநர் வேண்டும் என நீண்ட நாளாக கேட்டு வந்தீர்கள். ஆனாலும் அவை இடம்பெறவில்லை. நானும் பல தடவை முன்னைய ஜனாதிபதிக்கு கூறினேன். ஆனால் செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறு ஆளுநர் மாற்றப்படாத காரணத்தினால் தான் நான் இன்று ஜனாதிபதியாக வெற்றிபெற்றேன். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் நான் நன்கு அறிவேன். இவற்றுக்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ” மறுபடியும் கைதட்டினர் கூட்டமைப்பினர். கூட்டத்தில் கலகல….
கைதட்டல் நிறைவுற அடுத்தக் குண்டைத் தூக்கிப்போட்டார் ஜனாதிபதி. அதாவது வேலையற்றவர்கள் குறித்த பிரச்சினை அது. இலங்கையில் ஆறு வீதமானவர்களே வேலையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினையும் விரைவில் தீர்க்கப்படும் என்றார். எல்லோரும் “ஆமா” போடுவதைப் போல அமர்ந்திருந்தனர்.
இப்படியே இழுத்தடித்த உரையை, “எங்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையுடன் செயற்பட்டு அனைவரும் ஒரே நாடாக இருந்து செயற்படுவோம். பாதுகாப்பு விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தீர்க்கப்படாதவற்றை தீர்க்க வேண்டும். வறுமையினை இல்லாது ஒழிக்க வேண்டும். மக்களது பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வடக்கிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியது போல தெற்கிலும் ஒற்றுமையுடன் பேசி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்”- என்று முடித்தார். மறுபடியும் எல்லோரும் ஒத்து கைதட்டினார்கள்.
இதில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சிற்றுரை ஆற்றினார். நாங்கள் அனுராதபுரத்தில் உரையாற்றும்போது சிங்களத்தில் தான் உரையாற்றுவோம். அதேபோல ஜனாதிபதியும் இங்கு தமிழில் உரையாற்றினால் நல்லிணக்கம் வளரும்” –என்றார். ஒரே சிரிப்பு – செய்தியாளர் பக்கம்.
அதேபோல அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் பொதியாக சுற்றப்பட்ட ஏதோ ஒன்றை ஜனாதிபதி மைத்திரியிடம் ஓடிப்போய்க் கொடுத்தார்.
இப்படியே கூட்டம் நிறைவுற வழமைபோலவே நல்லூருக்குச் சென்று முருகனின் ஆசியையும் வேண்டிக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி பலாலியில் அமைத்த இராணுவ விடுதியைத் தரிசித்தார் இன்னாள் ஜனாதிபதி. அத்தோடு யாழ்ப்பாணத்தை விட்டு விடைபெற்றார்.
ஆனால் இந்தப் புதிய ஜனாதிபதியின் பயணத்தில் பெரிய “கிக்“ என்று எதுவுமில்லை. வீதிக்கு, இடிந்த கட்டடங்களுக்கு இராணுவம் இரவோடிரவாக வர்ணம் தீட்டவில்லை. யாழ்ப்பாணத்து மதில் முழுவதும் பதாகைகள் ஒட்டப்படவில்லை. பாடசாலை மாணவிகள் வரவேற்பு நடனத்துக்காகத் தயார்படுத்தப்படவில்லை. எல்லோரும் கட்டாயம் வரவேண்டும் என்று சுற்றுநிருபங்கள் வரவில்லை. நேற்றிலிருந்து ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள பகுதிகளில் மாத்திரமே இராணுவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. முத்தவெளி தொடக்கம் பலாலி வரை நின்றனர். சிவில் உடையிலும் இராணுவம் நின்றது.
முன்னைய ஜனாதிபதியின் காலத்தைப் போல சத்தம், சந்தடி, அடிதடி இல்லாமல் வந்துபோனார் மைத்திரி.
ஜெரா








