காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்க சுயாதீன உள்நாட்டு பொறிமுறை வேண்டும்!
யுத்தம் இடம்பெற்ற நாட்களிலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பான நிலையை இலங்கை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறை ஒன்ற நிறுவப்படு வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கான இயக்குநர் (Dominik Stillhart) டொமினிக் ஸ்ரில்ஹார்ட் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்களது தேவைகளும், கோரிக்கைகளும் பன்முகப்படுத்தப்பட்டவை என டொமினிக் ஸ்ரில்ஹார்ட் தெரிவித்துள்ளார். உண்மையைத் தெரிந்துகொள்ளல், காணாமல் போனோரின் நிலையை அறிந்துகொள்ளல், விலக்கப்பட்டுள்ள அம்சங்களை பொறுப்புக் கூறலில் சேர்த்துக் கொள்ளப்படல் என்பனவே இவர்களின் தேவை மற்றும் கோரிக்கைகளாகும்.
பொருளாதாரம், சமூக-உளவியல், நிர்வாகம், ஓய்வூதியம், சொத்துக்கள் தொடர்பான சட்டக்கவலை உள்ளிட்ட தேவைகளும் இவர்களுக்கு காணப்படுகின்றன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடந்த வருடம் ஒக்டோபரில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து சுமார் 16 ஆயிரத்து 100 கோரிக்கைகள் இந்த மக்களிடம் இருந்து பெறப்பட்டிருந்தன. இவற்றில் 5 ஆயிரத்து 200 கோரிக்கைகள் காணாமல் போன வீரர்கள் மற்றும் காவல்துறையினரது குடும்பத்தவர்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.
இந்தக் கணிப்பீட்டின் இறுதியில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டதோடு அந்த அறிக்கை நம்பிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக பிரதிபலிப்பை வழங்குமாறும், இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றும் தெரிவித்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடந்த 1989ஆம் ஆண்டிலிருந்து மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதுடன், ஜே.வி.பி கலவரம், யுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவிகளை வழங்கி வருகின்றது.
தற்போதும்கூட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஜீவநோபாய உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிவருவதுடன் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.