இன்று சீனா செல்கிறார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமான இன்று சீனாவுக்குச் செல்லவுள்ளார். இன்றிரவு பீஜிங்கை சென்றடையும் அவருக்கு, நாளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
இந்த வரவேற்பு நிகழ்வையடுத்து, சீன ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெறும். இந்தப் பேச்சுக்களில் பொருளாதார உறவுகள் குறித்து மீளாய்வு, செய்யப்படும். குறிப்பாக, துறைமுக நகரத் திட்டம் குறித்துப் பேசுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதிக்கு நாளை சீன ஜனாதிபதி மதிய விருந்தளிப்பார். அதையடுத்து, சீனப் பிரதமர் லி கெகியாங்குடனான சந்திப்பு இடம்பெறும். அத்துடன் சீனாவின் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழுத் தலைவர் ஷாங் டிஜியாங்கையும் மைத்திரிபால சிறிசேன நாளை சந்தித்துப் பேசுவார்.
இலங்கை ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம், சக்தி, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இராஜாங்க அமைச்சர் ரோசி சேனநாயக்க பிரதியமைச்சர் ஜெகத் புஸ்பகுமார ஆகியோரும், சீனா செல்லவுள்ளனர்.
அத்துடன், பீல்ட் மார்ஷர் சரத் பொன்சேகாவும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளார். மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொண்ட போது அவருடன், அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், சம்பிக்க ரணவக்க, விஜேதாச ராஜபக்ச ஆகிய ஐவரும் சென்றிருந்தனர்.
ஆனால், சீனப் பயணத்தில் அவருடன், குறைந்தது எட்டு அமைச்சர்களும், அமைச்சர் ஒருவருக்கு இணையான பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவும் அவரது குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.








