கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது கூட்டமைப்பு!
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியின் கீழ் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இன்று நண்பகலில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர் பதவிப்பிரமானம் செய்தனர். இதன்படி கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அமைச்சராக ஆரியவத்தமி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆதரவை விலக்கிக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆறு உறுப்பினர்களும் சம்பந்தனை சந்தித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஆட்சியமைக்குமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறுபேரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னரும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் ஆதரவு வாபஸ் பெறப்பட்டு ஆட்சி தடுமாறும் நிலையில் அரசியல் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்றும் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அறிவித்துள்ளதுடன் தொடர்ந்து ஆட்சி புரியுமாறு கேட்டுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.








