43 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கை வருகிறார்
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற் கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அவர், விரைவில் தாம் இலங்கை வருவதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் வரும் ஜுன் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடைசியாக, 1972ம் ஆண்டு ஜூலை முதலாம் நாள், அமெரிக்காவின் 55வது இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பி. ரோஜர்ஸ், (William P. Rogers) இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். யேமன் செல்லும் வழியில் அவர், கொழும்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அதற்குப் பின்னர், இலங்கைக்கு வருகை தரவுள்ள அமெரிக்காவின் மிக உயர் மட்டப் பிரமுகராக, ஜோன் கெரியே இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








