Breaking News

வலி வடக்கில் மேலும் 570 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் படையினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ள நிலத்தில் மேலும் ஒரு தொகுதி நிலம் எதிர்வரும் 14ம் திகதி தமிழ் சிங்கள புதுவருட தினத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சுமார் 570 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவுள்ளது. யாழ் மாவட்ட அரசஅதிபர் என்.வேதநாயகன் இதனை தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் உள்ள 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதன் பிரகாரம் ஏற்கனவே வசாவிளான் 197 ஏக்கர் நிலமும், வளலாயில் 233 ஏக்கர் நிலமும் விடுவிக்கப்பட்டிருந்தது.

உறுதியளித்த நிலத்தில் எஞ்சியிருந்த 570 ஏக்கர் நிலமே எதிர்வரும் புதுவருட தினத்தில் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அந்தப்பணிகள் முடிந்ததும் எதிர்வரும் 7ம் திகதி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிடவுள்ளனர். அதிகாரிகள் அங்கு சென்றபின்னர்தான் எந்தெந்த கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.