நியாயமான ஓர் அதிகாரப் பகிர்வு தமிழருக்கு தேவை - கிரியெல்ல
வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு நியாயமான ஓர் அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவது அவசிய மானது. இதில் இரு பிரதான கட்சிகளும் ஓர் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
கண்டி, ஹாரகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய அரசு ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் மேற்கொண்ட பெரும் பணிகளை வேறு எந்த அரசும் முன்னெடுக்கவில்லை. நாட்டில் தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் கடந்த காலங்களில் உலகத் தலைவர்கள் இலங்கைக்கு பயணம் செய்வதை நிராகரித்து வந்தனர். அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்கப்படும். தேசிய அரசு என்பது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதல்ல. மாறாக அனைத்துக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே. அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து செயற்படத் தவறினால், எதிர்காலத்தில் நாடு பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
வடக்கு - கிழக்கு பிரச்சினை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு பிரதான கட்சிகள் இணைந்து வடக்குdகிழக்குக்கு நியாயமான அதிகார பரவலாக்கத்தை வழங்குவது தொடர்பில் இணக்கம் காணவேண்டும். அதேபோல் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து முகம் கொடுக்க வேண்டும். என்றார்.








