சிறிலங்கன் வானூர்தி சேவையில் மோசடி - முன்னாள் தலைவர் மீது குற்றச்சாட்டு
சிறிலங்கன் வானுர்தி நிறுவனத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகளுடன் அதன் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்ஹ தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணை செய்த சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சீ.வெலிய முனவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் தலைவராக பதவி வகித்த காலப்பகுதியினுள், ஸ்ரீலங்கன் வானுர்தி நிறுவனம், நிதி ரீதியாக பல மில்லியன் ரூபா நட்டத்திற்கு முகங்கொடுத்திருந்தது. வானுர்தி நிறுவனத்தின் தொழில்வாய்ப்புக்காக இணைத்து கொள்ளல் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் தலைவர் தான்தோன்றிதனமாக செயற்பட்டுள்ளார்.
இளம் பெண் வானுர்தி சேவையாளர்களை இணைத்து கொள்வதில் விஷேட அக்கறை செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அவர் பல பில்லியன் கணக்கா ருபாய் செலவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையற்ற வகையில் புதிய வானுர்தி கொள்வனவும் முன்னாள் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. போலி தகவல்கள் முன்வைக்கப்பட்டு, வானுர்தி சேவை ஊடாக சொகுசு ஜீப் ரக வாகனங்கள் மற்றும் சிற்றூர்ந்துகளை அவர் பயன்படுத்தியுள்ளார். அதேபோல, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஏனைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு ஸ்ரீ லங்கன் வானுர்தி சேவையூடாக வேதனம் வழங்கப்பட்டுள்ளது.
எந்தவித எழுத்து ஆவணங்களுமின்றி, தாம் விரும்பிய வகையில் அவரால் ஸ்ரீலங்;கன் வானுர்தி நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்புக்கள் இடம் பெற்றுள்ளதாக ஜே.சீ.வெலிஅமுன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, 15 லட்ச ரூபாய் வேதனம் வழங்கி அவரால் நியமிக்கப்பட்ட வானுர்தி சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி, நிறுவனத்தின் நலனுக்காக எந்த செயற்பாடையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
அந்த பிரதான நிறைவேற்று அதிகாரி அதற்கு இணையாக மேலும் இரண்டு நிறுவனங்களில் வேதனங்கள் பெற்று கொண்டமை விஷேட அம்சமாகும். அத்துடன் ஸ்ரீலங்கன் வானுர்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அதன் பெண் சேவையாளருடன், நிறுவனத்தின் செலவில் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் பல தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் விரைவான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அந்த அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.








