வட,கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்ய வருகிறது புதிய சட்டத் திருத்தம்!
30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள பிரஜைகளின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்ட மூலம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1993 மே மாதம் 1ம் திகதி தொடக்கம் 2009 மே மாதம் 1ம் திகதி வரையான காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் முன்னர் அந்த காணியில் இருந்தவர்களுக்கு காணி சொந்தமாகும் என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள ஆட்சி உரிமை சட்டத்தின்படி 10 வருடங்களுக்கு குறையாமல் ஒரு காணியில் இருப்பவர்களுக்கே அக்காணி சொந்தம் என்ற சரத்தினால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அநீதி ஏற்படும் என்றும் அதனை தவிர்க்கவே விசேட திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








