இந்தியா, சீனா, இலங்கை இடையே முத்தரப்பு பேச்சு!
பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, இலங்கை , சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த திட்டத்தை முன்மொழிந்ததாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு என்றும், அது இலங்கையில் நடக்கும் எல்லாவற்றையிட்டும், கரிசனை கொண்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.
புதுடெல்லியின் இந்தக் கவலைகளை, பீஜிங் புரிந்து கொண்டுள்ளது என்றும், இதனைக் கருத்தில் கொண்டே சீன ஜனாதிபதி முத்தரப்பு பேச்சு யோசனையை முன்மொழிந்தார் என்றும், அதனை இலங்கை வரவேற்றதாகவும், விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில், பங்கேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிடுகையில், சீனாவுடனான வரலாற்று உறவுகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார் என்று குறிப்பிட்டார்.
அதற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “எமது நட்புறவு வரலாற்று ரீதியானது மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் உறவுகளைக் கொண்டது” என்று குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார். இலங்கை அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ச, ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். இவர்கள் அண்மையில் இலங்கை ஜனாதிபதியுடன் சீனா சென்று திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








