Breaking News

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை சீனா வழங்குகிறது!

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த இலங்கை அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, இலங்கை அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாகவே, இந்த மானியக் கொடைகள் கிடைத்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான எந்த நிபந்தனைகளுமின்றியே, இந்த மானியக் கொடைகளை வழங்க சீனக் குழுவினர் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பீஜிங்கில் நடந்த பேச்சுக்களின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது அதிகாரிகள் துறைமுக நகரத் திட்டம் குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதுகுறித்து விளக்கமளித்திருந்தார். சுற்றுச்சூழல், சட்டம், காணி உரிமை, தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு இது குறித்து ஆராய்வதாக அவர் தெரிவித்திருந்தார்” என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.