இது அரசியல் வேட்டை! சம்பளம் மட்டுமே வங்கிக் கணக்கில் உள்ளது - கோத்தா ஆதங்கம்
நாட்டில் பொலிஸ் ஆட்சி ஏற்பட்டு ஜனநாயகம் அழிந்துபோய் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் செயலாளர் பதவி வகித்த அனைவரையும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்று திரும்பிய போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 9 வருட காலத்தில் தவறான வழியில் பணம் சேர்க்கவில்லை என்றும் மோசடியில் ஈடுபடவில்லை என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ, தன்னை விசாரணைக்கு அழைப்பதாயின் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவை ஓய்வூதியமும் பணிக்கான சம்பளமுமே தனது வங்கிக் கணக்கிற்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் அநாவசியமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்றும் முதலில் அவர்களையே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்க வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேட்டை என்றும் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்








