Breaking News

பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டது இலங்கை

பாகிஸ்தானுடன் இலங்கை அரசாங்கம் இன்று அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள் ளது. 


பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்தே இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

கையெழுத்திடப்பட்டுள்ள ஆறு உடன்பாடுகளில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடும் ஒன்றாகும். இதனை, இருநாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், உடன்பாட்டின் விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் போது, அணுசக்தி ஒத்துழைப்புக் குறித்த உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானுடனும் இத்தகைய உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இன்றைய பேச்சுக்களின் பின்னர், இருநாடுகளின் தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது, தாம் பிராந்திய, அனைத்துலக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், ஆறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவம், விளையாட்டு, கப்பல்துறை, அணுசக்தி, போதைப் பொருள், கல்வி ஒத்துழைப்பு ஆகியன குறித்தே இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இலங்கை முதலாவது அணுஉலையை நிர்மாணிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.