மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தனிப்பட்ட பேச்சு நடத்த ஏற்பாடாகியிருந்தது.
இந்தநிலையில், பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது, கோத்தபய ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டது உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்சவைக் கோபமூட்டியுள்ளது. இதையடுத்தே, ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பை, மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளார்.
முன்னதாக, இன்றைய சந்திப்புக்கு மகிந்த ராஜபக்சவுக்கு நேரமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார். ஆனால், ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளால் தான், சந்திப்பை அவர் ரத்துச் செய்ததாக, குமார வெல்கம தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.