Breaking News

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடரும் எதிர்ப்பு நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது.

பாராளுமன்றம் நேற்று (20) முற்பகல் கூடியபோது முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் என எழுத்த மூலம் வாக்குறுதி வழங்குமாறு கோரி 50 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரகள் நேற்று (20) முற்பகல் வேளையில் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

சபையில் அமர்ந்த வண்ணம் அவர்கள் தமது கோரிக்கையினை வலியுறுத்தினர். தற்போதும் 40 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள்ளேயே எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்துவருவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதற்தடவையாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் பாராளுமன்றத்திற்குள் இருந்து எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் என்ற வாக்குறுதியை சபாநாயகர் ஊடாக எழுத்து மூலம் வழங்க வேண்டும் என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருமளவிலான ஊடகவியலாளர்களும் நேற்று (20) இரவு முழுவதும் பாராளுமன்றத்தில் இருந்தவாறு இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான செய்திகளை சேகரித்ததாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர். இன்று (21) முற்பகல் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது. ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று (20) மாலை பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன

இந்த கலந்துரையாடல்களின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எத்தகைய நிலைமை காணப்பட்டாலும் இன்று 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார். எவ்வாறாயினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் புதிய தேர்தல் திருத்தமும் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (20) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கமைய 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று (21) நிறைவேற்றப்படுவதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 இற்கும் மேற்பட்டவர்கள் சபையில் தொடர்ந்தும் அமர்ந்தவண்ணம் தமது எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி, நேற்று (20) மாலை பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் அழைப்பின் பேரிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தலைவர் பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்டறிவதற்காக சபாநாயகர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். ஆணைக்குழுவின் தலைவர் தெளிவுபடுத்தும் விடயங்களை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்