நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஆதரவில்லை - கூட்டமைப்பு
நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக செயற்பட தாங்கள் ஆதரளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தினேஸ்குணவர்தனவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு சிலத் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்கட்சித் தலைவராக தொடர தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று கடந்த தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தற்போது அதிக ஆசனங்களை கொண்ட எதிர்கட்சி என்ற அடிப்ப்டையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வருகிறது.
எனினும் தமிழர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக வருவதற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற இனவாத அடிப்படையிலான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அண்மையில் கண்டித்திருந்தார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








