எதிர்க்கட்சித் தலைமையால் எமக்கு என்ன பயனோ?
தேசிய அரசு அமைந்ததை அடுத்து எதிர்க்கட்சிகளின் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க சிங்கள இனவாத கட்சிகள் சம்மதம் தெரிவிக்குமா? என்ற கேள்வியும் இச்சந்தர்ப்பத்தில் எழவே செய்யும். எதுவாயினும் எதிர்க்கட்சித் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைப்பதால் என்ன நன்மை என்பதை ஆராய்வதே தமிழ்த் தரப்பின் பணியாக இருக்கும்.
முன்னொரு தடவை இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக காலஞ் சென்ற அ.அமிர்தலிங்கம் இருந்தார். அச்சமயம் அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. நெவில் பெர்னாண்டோ, சிறில் மத்தியூ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அமிர்தலிங்கத்தை கடுமையாகத் தாக்கினர். இவையயல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள்.
அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் சாதித்தது என்ன? என்றால் எதுவுமே இல்லை. அப்படியானால் எதிர்க்கட்சித் தலைமையில் இருந்தது ஏன்? என்றால், இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலாவது தமிழர் யார்? என்ற வரலாற்றுப் பதிவை தமக்காக்கிக் கொள்வதுடன்; எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்கக்கூடிய சட்டரீதியான சலுகைகளை அனுபவிப்பது என்பதாக இருக்கும். இதைத்தவிர வேறுஎந்தப் பயனும் தமிழருக்கு கிடைக்கவில்லை.
இப்போதும் அதேநிலைமைதான். இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்குமாயின் பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்துக்குப் பின்னர் - எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் இரா.சம்பந்தர் என்பது வரலாற்றில் பதிவாகும். இதைவிட வேறுஎதுவும் கிடைக்கப் போவதில்லை. இருந்தும் ஒன்றைமட்டும் சொல்லிவிடமுடியும்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைத்தவுடன் எதிர்காலத்தில் இப்படியயாரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது, இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் சிங்களக் கட்சிகளாக இருக்க வேண்டுமே தவிர, தமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அமுலாக்கினார்
இவரின் நரித்தந்திரம் அப்போது வேலை செய்ததாயினும் இப்போது நிலைமை வேறாகிவிட்டது. ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதிப் பதவியையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பிரதமர் பதவியையும் கொடுக்கும் அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், எதிர்க்கட்சித்தலைமை யாருக்குக் கிடைக்கக் கூடாது என்று ஜே.ஆர் நினைத்து சதித்திட்டம் தீட்டினாரோ! அத்திட்டம் சிதைவடைந்து விட்டது. இந்த அறக்கருத்தை சுட்டிக்காட்டுவதற்கு உதவுவதாக மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைமையின் பயன் இருக்கும் அவ்வளவு தான்.








