கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வி அபிவிருத்தி
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட வர்த்தமானி மூலம் அறிவித்து கல்வி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் வடமாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். வட மாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் தொண்டர் ஆசிரியர்களாகவும் சேவையாற்றும் ஆசிரியர்களை உள்வாங்குவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவந்திருந்தார்.
இதன் அடிப்படையில், தேர்வு பரீட்சைகள் மூலம் மிகவிரைவில் அவர்களை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், மலையகத்தில் கணித விஞ்ஞான தொடர்பாக 23 பாடசாலைகளும் சங்கீதம் நடனம் தொடர்பாக ஒரு பாடசாலையும் விளையாட்டுத்துறை அபிவிருத்திகாகாக ஒரு பாடசாலையை தரமுயர்த்தப்படவுள்ளன.








