Breaking News

ஜோன் கெரியின் வருகைக்குப் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு!

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே  நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அடுத்தமாதம் முதல் வாரத்தில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்னமும், பயண நாள் பற்றிய முடிவுகளை அறிவிக்கவில்லை.

வேறும் பல நாடுகளுக்கு அடுத்த மாதம் ஜோன் கெரி பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே மாதம், நிச்சயமாக அவர் இலங்கை வருவார் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவாக, வெளிநாட்டு அரசுத் தலைவர் அல்லது உயர் அரசாங்கப் பிரதிநிதி நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதோ தேர்தல் நடத்தப்படுவதோ இல்லை. எனவே, அந்த மரபைக் கடைப்பிடிக்கும் வகையில், ஜோன் கெரியின் பயணம் முடியும் வரை, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.