Breaking News

ஜோன் கெரி சனியன்று இலங்கை விஜயம்: வடபகுதிக்குக்குச் செல்லமாட்டார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை, மே 02ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தின் பதில் பேச்சாளரான மேரி ஹாப், ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை மே 2 ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அத்துடன், 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமும் இதுவேயாகும்.

கொழும்பில், தங்கியிருக்கும் போது, அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மற்றும் ஏனைய சமூகங்களினது பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ள ஜோன் கெரியின் கருத்துக்களைக் கேட்டறிவதுடன் இலங்கையின் அமைதியான, உறுதியான, செழிப்பான எதிர்காலத்துக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்துவார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த விஜயத்தின் போது அவர் வடபகுதிக்குச் செல்லமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.