ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவு
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் உள்ளிட்ட ஆறு தேரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை உடன் தாக்கல் செய்து வழக்குத் தொடருமாறு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து புனித அல் குர் ஆனை அவமதித்தமை, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தே இந்த குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்து வழக்கு தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
புனித அல் குர் ஆனை அவமதித்தமை, நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்புக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸாரும் மத விவகாரங்களைக் கையாளும் பொலிஸ் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் அது தொடர்பிலான வழக்கானது நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலமையில் சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் சந்தேக நபரான பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரரும் ஏனைய ஐந்து தேரர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
இந் நிலையில் முதலில் குர் ஆனை அவமதித்தமை தொடர்பிலான விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை ஆரம்பித்த போது கடந்த தவணை வழக்கில் ஆஜராகாத பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் சார்பில், சுகயீனம் காரணமாக தான் ஆஜராக முடியாது போனதாக குறிப்பிடப்பட்டது. எனினும் கடந்த தவணை வழக்கு திகதியின் மறு நாள் ஞானசார தேரர் ஊடகங்களில் பேசியதை அவதானிக்க முடிந்ததாக முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து சுகயீனம் தொடர்பிலான மருத்துவ அறிக்கையை நீதிமன்றம் ஞானசார தேரரிடம் கோரியதுடன் அடுத்த தவணை விசாரணைகளின் போது அதனை நீதிமன்றில் சமர்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து குர் ஆனை அவமதித்தமைத் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் விசாரணை நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரிடம் நீதிவான் வினவினார். அது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள விசாரணை அறிக்கையானது சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது ஆலோசனைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் நீதிவானுக்கு குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலுக்குள் அத்துமீறி புகுந்து ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பை குழப்பியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விடயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள ஞானசார தேரர் உள்ளிட்ட ஆறு தேரர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இந் நிலையில் இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான் இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.