Breaking News

உண்ணாவிரதம் பெரும் அதிருப்தியையும் அயர்ச்சியையும் தருகிறது - ஜெரா (காணொளி இணைப்பு)

நடந்து முடிந்திருக்கிற உண்ணாவிரதம் பெரும் அதிருப்தியையும் அயர்ச்சியையும் தருகிறது. ஆரம்பம் முதலே பதிவிடக்கூட ஒரு சந்தேகம் துருத்திக்கொண்டிருந்தது. உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பின் முக்கிய சாரமே பலரை வெகுவாகக் குழப்பியது. “அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை”

தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஜனநாயக வழியில் போராட்ட மயப்படும்போது தங்கள் சுயநல அரசியலுக்காகவாவது இரண்டு தரப்புக்கள்தான் எப்போதும் முன்நிற்கும். ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றையது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தெற்கை ஆளுகின்ற கட்சிகளோ, வடக்கிலிருந்து அரசுக்கு பங்காளியாக செயற்படும் கட்சிகளோ ஒருபோதும் தமிழர் நலன்சார் ஜனநாயகப் போராட்டங்களில் பங்கெடுத்ததில்லை. எனவே தமிழ் மக்கள் மயப்பட்ட பிரச்சினையொன்றின் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்று கூறுவதும், தமிழ் தேசிய தரப்புக்களை நிராகரிப்பதும் ஒன்றுதான்.

அதற்கு அடுத்து இந்தப் போராட்டத்துக்கான தீர்ப்பை யாரிடமிருந்து முதன்மைப்படுத்திக் கேட்டது என்றும் பார்க்க வேண்டும். முதலமைச்சர், ஆளுநர், அரச அதிபர் ஆகியோரே இலக்குவைக்கப்பட்டிருந்தனர். அதன்படி முதலமைச்சர் நேற்றிரவு உண்ணாவிரத களத்துக்கு வருகைதந்திருந்தார். காரணத்தைக் கேட்டார். போராட்டக்காரர்களை அவர் அனுகிய விதத்திலும் தவறு இருந்ததாக சில கருத்து இருந்தது. 

நக்கல் பாணியில் உரையாடலை ஆரம்பித்தார். எனவே சினத்தோடுதான் உரையாடல்கள் வளர்ந்தன. ஒரு கட்டத்தில் நாள் குறித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். மறுத்துவிட்டனர். அவமானப்படுத்தப்பட்டது மாதிரியான முகவுணர்வுடன் முதலமைச்சர் வெளியேறினார். 

நம் எதிரியாகவே இருந்தாலும், வயதுக்கும், அனுபவதுக்கும் மரியாதையளித்து செயற்படவேண்டியது அனைவரினதும் அடிப்படை இயல்பு. அத்தோடு வடமாகாண மக்களின் அதிகப்படியான விருப்போடு தெரிவுசெய்யப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவர். அறிவார்ந்த போராட்ட தளத்தில் உணர்ச்சிப் பாச்சல்களுக்கு இடம்கொடுப்பது நல்லதல்ல. நானும் முதலமைச்சரின் நடவடிக்கைகளை விமர்சித்தவன். ஆனால் நேற்றைய இரவு போராட்டக்காரரிகளிடம் அவமானப்பட்டு திரும்புகையில், அவர் மீது அனுதாபம்தான் ஏற்பட்டது. என்ன தவறு செய்திருப்பினும் முதலமைச்சர் எம்மைவிட வயதால், அனுபவத்தால் மூத்தவர். ஒரு மாகாணத்தின் முதலமைச்சர். 

பின்னர் இன்றுகாலை சில விடயங்களை எழுதி, இந்த இந்தக் கோரிக்கைகளுக்கு தான் உடன்படுவதாக போராட்டக்காரர்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து திருத்தி அனுப்பும்படியும் கேட்டிருக்கிறார் முதலமைச்சர். அப்படியே செய்திருக்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். திருப்பி அனுப்பபட்ட கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து பிற்பகல் 1.30 மணியளவில் எடுத்து வந்த மருத்துவர் செந்தூரன் அதனைப் போராட்டக்காரர்கள் மத்தியில் படித்துக் காட்டினார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய ஆறு அம்சக் கோரிக்கைகள்,

அ) உண்ணாவிரதிகள் சார்பில் ஆறு மேலதிக நிபுணர்களின் பெயர்களைத் தருமாறு கோரப்பட வேண்டும்,

ஆ) அவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்பது நிபுணர்களுடன் சேர்ந்து புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவாக செயற்படுவார்கள்,

இ) தற்போது இருக்கும் தரவுகளின் அடிப்படையில் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் ஆகியவரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. வேறு சிலவற்றில் அவ்வாறு காணப்படவில்லை. இதன் காரணத்தினாலேயே பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் நீரை உட்கொள்வது உசிதமில்லை என்று கருதுகின்றோம்,

ஈ) உரிய தீர்வு காணப்படும் வரையில் எம்மால் நீர் விநியோகம் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வரும்,

உ) தர உறுதிப்பாடு, சீரான நீர்வழங்கல், நீர் பெறப்படும் மூலம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் மேற்பார்வை உறுதிப்படுத்தப்படும்,

ஊ) நைத்திரேற்று நீரில் கலந்திருப்பதையும் சில கிணறுகளில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பபதையும் அகற்ற நாம் மத்திய அரசையும், சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் உதவியையும் நாட வேண்டியுள்ளது. போன்ற விடயங்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளதோடு,

இதற்கான நடவடிக்கைகள் உடனே எடுக்கப்படுவதனை உறுதிசெய்ய இதுகுறித்து கௌரவ ஆளுநருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும், எனினும் செய்யப்பட்டு வரும் ஆய்வின் இறுதி அறிக்கை புதிய மீள் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழு கூடிய விரைவில் எமக்குச் சமர்ப்பிக்க வேண்டும், - என்றும் எழுதியிருந்தார். இதிலும் திருத்தம் தேவைப்படின் எழுதிய அனுப்புங்கள் என்று முதலமைச்சர் போராட்டக்காரர்களிடம் கேட்டிருந்தார். அதிலும் சில கோரிக்கைகள் பற்றி விமர்சித்துவிட்டு, தம் கோரிக்கைளை ஏற்று கையெழுத்து இட்டு தரும்படி முதலமைச்சரிடம் சொல்லச் சொல்லி மருத்துவர் செந்தூரனை அனுப்பிவிட்டனர்.

கடிதத்தை எடுத்துக்கொண்டு முதலமைச்சர் அலுவலகம் சென்றவர், அங்கு நடந்த வாக்குவாதங்களின் பின்னர் முதலமைச்சர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று கையெழுத்திட்டு தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த வேளையில் அலுவலகத்தில் தட்டச்சு செய்ய ஆள் இருக்கவில்லை. அதனால் மருத்துவர் செந்தூரன் தானே தட்டச்சு செய்துகொண்டு, கடிதத்துக்கு கையெழுத்தும் வாங்கியபின் போராட்டம் நடத்தப்பட்ட நல்லூர் முன்றலுக்கு வந்திருக்கிறார். போராட்டக்களத்தில் யாருமேயிருக்கவில்லை. போராட்டம் முடிந்ததாகவும், ஆளுநர் மற்றும், அரச அதிபர் வந்து வாய்மூல உறுதியளிப்பை பின் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் அறிந்துகொண்டார்.

இவ்வளவும்தான் நடந்தது. தமிழ் தேசியத் தரப்புக்கள் மீது மலையளவு விமர்சனங்கள் இருக்கலாம். கோபதாபங்கள் இருக்கலாம். அதற்காக அந்தத் தரப்பை நிராகரிக்க முடியாது. ஒரு குடும்பமாகவே எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். தமிழ் தேசிய தரப்புக்குள் நின்றுதான் சரியானவற்றை அடையாளம் காணவேண்டும். எங்கள் குடும்பப்பிரச்சினையை அயல் வீட்டுக்காரனிடம் கொடுத்துத்தான் தீர்வு காணப்போகிறோம் எனில், அவனிடம் நம்மை ஆள ஒப்படைக்கிறோம் என்றுதான் அர்த்தம். தமிழில் பேசிய முதலமைச்சரின் உரையாடலும் சுன்னாகம் பிரச்சினையில் கூட்டமைப்பும், வட மாகாண சபையும் செய்த தில்லுமுல்லுகள், குறைபாடுகள் குறித்து பல விமர்சனம் உண்டு. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் தேசிய தரப்புக்களையும் தூக்கியெறிந்து, இதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை, இலங்கை அரசு நேரடியாக தலையிட்டுத்தான் தீர்வு தரவேண்டும் என்று கேட்பது, தமிழர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தான் விடயமாக அமையும். ஏற்கனே அஸ்தமித்துக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய அரசியல் பயணத்தை விரைவாக்கும் முயற்சியாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமையும்.

இந்தப் பதிவு, உங்கள் போராட்டத்தை, சமூகம் குறித்த அக்கறையை, தியாக உணர்வை, பசி கிடத்தலில் கோரத்தை விளங்கிக்கொள்ளாமல் கொச்சைப்படுத்துவதற்காக எழுதப்படவில்லை, அப்படி தோன்றினால் மனதால் மன்னித்துவிடுங்கள். நம் விழிப்புக்காக மட்டுமே எழுதப்படுகிறது.

- ஜெரா-

குறிப்பு-

தமிழில் பேசிய முதலமைச்சரின் உரையாடலும் ஆங்கிலத்தில் ஆளுனருடன் இடம்பெற்ற உரையாடலும் வாசகர்களுக்காக இணைக்கப்படுகிறது முதலமைச்சரைவிட அப்படியென்ன உத்தரவாதம் இவர்களுக்கு வழங்கப்பட்டது என்னதை பாருங்கள்


-ஆசிரியர்-
வடக்கு முதல்வரிடம் வாக்குவாதப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்


ஆளுனரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும்  ஆர்ப்பாட்டக்காரர்கள்