இரு தேசங்களின் கூட்டாகவே தீர்வு அமைய வேண்டும்! இந்நிலைப்பாடும் சம்பந்தனால் நிராகரிப்பு
எங்களுடன் எந்த புலம்பெயர்ந்த அமைப்புகளோ கட்சிகளோ பேச்சுவார்த்தைக்கு வரவும் இல்லை. அது தொடர்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவுமில்லை.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் இது மக்களை குழப்புவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தந்திரோபாயமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து செயற்படுவது தொடர்பாக வினவியபோதே மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக திருகோணமலையில் நடந்த கூட்டத்தில் இரு தேசம் ஒரு நாடு என்ற நிலைப்பாடு சாத்தியம் இல்லை. அது வெற்றுக் கோஷம் என்றும் மக்கள் அந்த நிலைப்பாட்டை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தமிழர்களின் தாயகம் தனித்தேசம். தமிழ் தேசத்திற்கு அங்கீகாரம் பெற்றே ஆக வேண்டும். அந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி தீர்வுக்குள் போகலாம். தமிழ் தேசத்தினுடைய இறைமையின் அடிப்படையிலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தான் சிங்கள தேசத்துடன் இணைந்து ஒரு சமஷ்டி தீர்வுக்கு நாங்கள் இணங்கலாம். தேசங்களின் கூட்டாக இந்த தீர்வு அமைய வேண்டும்.
இந்த நிலைப்பாட்டை சம்பந்தன் பகிரங்கமாக நிராகரித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் கொள்கை இணக்கப்பாடு வரப்போவதில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது கொள்கை பிரச்சினையால்தான். இந்த நிலைப்பாட்டை விட்டு கூட்டமைப்பு வெளியேறி ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறது என்ற காரணத்தினால் தான் நாம் வெளியேறினோம். இன்றும் கூட சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார். இத்தகைய நிலையில் எங்களுக்கும் கூட்டமைப்புடன் இணங்கி செயற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அது மட்டுமல்ல வருகின்ற தேர்தல்களில் தனியாக வடக்கு, கிழக்கில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.
எங்களுடன் எந்த புலம்பெயர்ந்த அமைப்புகளோ, கட்சிகளோ பேச்சுவார்த்தைக்கு வரவும் இல்லை, அது தொடர்பில் எந்த முயற்சியும் இல்லை. தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தன்னிச்சையாக போட்டியிடப்போகின்றன என்று அறிவித்துள்ள நிலையில் மக்களை குழப்பி எங்கள் பக்கம் மக்கள் திரும்பாமல் இருப்பதற்கு கூட்டமைப்பின் தந்திரோபாயமாகும் இது.என தெரிவித்துள்ளார்.