Breaking News

சந்திரிகாவை பிரதமராக்குவதே மைத்திரியின் செய்ந்நன்றி -

தென்பகுதியிலும் வடபுலத்திலும் அரங்கேறிவரும் அரசியல் குழப்பங்களைப் பார்க்கும் போது, கட்டாந்தரையில் நின்று ‘ஓ’ வென்று கதற வேண்டும் போல் உள்ளது. அந்தளவிற்கு அரசியல் திருகுதாளங்கள் மலிந்து போயுள்ளன.

தென்பகுதியில் மட்டுமன்றி வடபுலத்திலும் அரசியல் திருகுதாளங்களுக்குப் பஞ்சமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சாரார் பிரதமர் ரணிலோடு சேர்ந்து கொண்டு வடக்கின் முதல்வரை வஞ்சம் தீர்க்கின்றனர். இது தவிர கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எந்தப்பக்கம் நிற்கிறார்? என்ன செய்கிறார்? என்று புரியாமலே உள்ளது.

ஏதோ! சீவியம் போகிறது என்பதைத் தவிர, அரசியல் பக்கத்தால் எந்த நன்மையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், நூறு நாள் வேலைத்திட்டத்தின் வேகம் போதுமானதாக இல்லையயன்றே சொல்ல வேண்டும்.

நூறுநாள் வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னதாக, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னதாக நூறுநாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்றால், சீமான் மகிந்த மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதான செய்திகள் ஜனாதிபதி மைத்திரிக்கு கடும் சுகவீனத்தைக் கொடுத்துள்ளது.

ஒரு பக்கம் பிரதமர் ரணிலின் அழுத்தம்; மறு பக்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மீண்டும் அரசியல் பிரவேசித்தல் என்ற தலையிடி என்றவாறு எல்லாமுமே குழப்பமாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்றபோது, திருப்பதியானின் திருக்கதவுத்திறப்பு உடைந்த சம்பவத்தையும் நினைக்க அரசியலில் ஏதோ விபரீதம் நடக்கும் சாத்தியம் உள்ளது என்று மனம் ஏங்குகிறது.

எதுவாயினும் பாராளுமன்றம் கலைக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரி ஒரு தத்திலிருந்து தப்பிக் கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மீண்டும் அரசியலில் பிரவேசிக்கின்ற நிலைமை ஏற்படுவதை தடுப்பதும் மைத்திரியின் தலையாய பணியாக இருக்கும்.

இந்தப் பணியில் மைத்திரிக்கு இருக்கக் கூடிய முக்கியமான உதவுகரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவாகவே இருப்பார்.  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திரிகா குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் போது, மகிந்தவின் அரசியல் பிரவேசம் தடுக்கப்படும். அதேவேளை, ஜனாதிபதி மைத்திரி கூறுவது போல ஒரு வேட்பாளராக போட்டியிடுவதற்கு மகிந்தவிற்கு தடையில்லை என்பதை மகிந்த ஏற்றுக்கொள்வாரா என்றால் இல்லை என்பதே பதிலாகவே இருக்கும்.

இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்­ பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு ஒரு போதும் உடன்பட மாட்டார். அவரைப் பொறுத்தவரை ஆகக் குறைந்தது பிரதமர் பதவியாவது தனக்குத்தரப்படவேண்டும் என்பதாகும்.  ஆனால், தன்னை ஜனாதிபதியாக்கிய சந்திரிகாவை பிரதமராக்குவதே அவருக்குத் தான் செய்யும் செய்ந்நன்றி என்பது ஜனாதிபதி மைத்திரியின் நிலைப்பாடு.

அதேநேரம் மகிந்த ராஜபக்­வின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்க - ரணில் விக்கிரமசிங்கவை ஓரம் கட்ட - மகிந்தவுக்கு ஆதரவாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மடக்க சந்திரிகாவை பிரதமராக்குவதே மைத்திரிக்கு இருக்கக் கூடிய ஒரே வழி என்பதால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் சந்திரிகா பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு நிறையவே உண்டெனலாம்.

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம்