Breaking News

சிங்கப்பூரில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுவார்த்தை!


புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றிற்கும் சிறிலங்கா
அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 3மதல் 5வரை சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ள பின்னனி என்ன?

ஏற்கனவே சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் தென்னாபிரிக்க மாற்றத்துக்கான அமைப்பும் இலங்கைக்கு பயணம் செய்து அரசாங்கம் உட்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தன என்பதும் அதனை தொடர்ந்து இந்த ஏற்றபாடு இடம் பெற்றதாகவும் அறிவித்துள்ளார்கள்.

இதில் அரசியல் குழு சார்பில் ஒருவர், சமூகக்குழு சார்பில் ஒருவர், கல்வியாளர் ஒருவர், புலம்பெயர்ந்த ஒருவர் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் உட்பட்ட சர்வதேச பங்காளர்கள் பங்கேற்றதாக அறிய வருகிறது.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் தென்னாபிரிக்காவின் மாற்றத்துக்கான அமைப்பு என்பன இந்த சந்திப்புக்கான பங்காற்றாளர்களை அழைத்திருந்தன. இதன்போது இலங்கையில் சனநாயகத்தை முன்னேற்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதும் அதில் கலந்து கொண்டவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இரகசியம் காப்பது நல்லதல்ல.

இது சுரேன் சுரேந்திரன், எம்.ஏ சுமந்திரன் போன்றவர்களது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்கானதல்ல இது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் உரிமைப்பிரச்சனை. இதில் தீர்வு பற்றி பேசும்போது அதன் பிரதிநிதிகளாக மக்களின் உண்மை பிரதிநிதிகளை உள்வாங்க வேண்டும் என்பதோடு அவர்களுக்கே தெரியாமல் இரகசிய பேச்சுவார்த்தை இரகசிய ஒப்பந்தம் என்ற நிலைக்கு தமிழர்களின் தீர்வுகள் இட்டுச்செல்லப்படக்கூடாது.

அண்மையில் கனடா சென்ற சுமந்திரன் பின்னர் சுரேந்திரனையும் அழைத்துச்சென்று அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் போட்டோ எடுத்துவிட்டு தாங்கள் தமிழர்களின் திர்வு தொடர்பில் உலகநாடுகளுடன் கலந்துரையாடி வருவதாக செய்திகளும் வெளியிட்டனர்.

இது தொடர்பில் தமிழ்சிவில் சமூகத்தை சேர்ந்த குருபரனின் பேட்டி


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பங்கேற்க வேண்டும் அத்தோடு புலம் பெயர் தேசத்தில் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்வாங்கப்பட வேண்டும்.  அத்தோடு அவர்களால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் இம்முறை அழைக்கப்படவில்லை.

இது தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தை சேர்ந்த கு.குருபரன் இதில் கலந்து கொண்ட சுரேந்திரனிடம் ருவிற்றரில் தமிழ் சிவில் சமூகம் அழைக்கவில்லை என கேட்டதற்கு இலங்கை சிவில் சமூகம் கலந்து கொண்டதாக பதிலளித்துள்ளார்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (TNA) பிரதிநிதிகள், உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அதன் அனைத்து முக்கிய உறுப்பினராக குழுக்கள் உட்பட இலங்கை அரசாங்கம், புலம்பெயர் தமிழ் குழுக்கள் இருந்து அதிகாரிகள்: கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ஏடிசி) , ஈழத் தமிழ் நோர்வே கவுன்சில் (NCET), மலேசிய தமிழர்கள், மற்றும் அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு கலந்து கொண்டுள்ளதாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

எது எப்படியிருந்தபோதும் தமிழர்களின் உரிமை நிரந்தர தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் போது உரிய அனைத்து தரப்பினரையும் உள்வாங்குவதோடு அந்த விடயங்கள் தொடர்பில் அதில் உரிய தரப்பினரான தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

பத்திரிகை அறிக்கை