Breaking News

மஹிந்தவும் மைத்திரியும் சந்திக்கவுள்ளனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அசாதாரன சூழல் நிலவுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் தற்பேதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து பேசவுள்ளனர்.

இச்சந்திப்புக்கு இருவரும் இணக்கம் தெரிவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே இருவரும் சந்திக்கவுள்ளதை ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், அவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இச்சந்திப்பின்போது கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து ஆராயப்படும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, இச்சந்திப்பை பொது இடமொன்றில் நடத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனசேனவை சந்தித்து பேசியதுடன், அவர்கள் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாகக்கொண்டே இந்தப் பேச்சுவார்த்தைக்கான இணக்கம் எட்டப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு கட்சிக்குள் பிளவு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி பிரச்சாரம் ஒன்றை செய்கிறது எனத் தெரிவித்த ஏக்கநாயக்க இவ்வாறான பிரச்சாரங்களுக்கு தீர்வு காண்பதும் இந்த சந்திப்பின் மற்மொரு நோக்கமாக இருக்கறது எனவும் கூறினார்.

இதேவேளை இரு தரப்பினரும் எங்கு எப்போது சந்திப்பார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலிருந்தும் இதுவரை அறிவிப்பு எதுவும் வரவில்லை.