28ஆம் திகதி '19' நிறைவேறாவிடின் நாடாளுமன்றம் கலைப்பு ! - அரசு எச்சரிக்கை
"அரசமைப்பின் 19ஆவது திருத்த்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்வரும் 28ஆம் திகதியே இறுதிச் சந்தர்ப்பமாகும். அன்றைய தினம் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் போனால் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்படும்'' என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.
ஆளுங்கட்சி பிரதம கொறடா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-
"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இன்று (நேற்று) நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்குத் தயாராகவே இருந்தோம். எனினும், முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ள விவகாரத்தை கையிலெடுத்து 19ஐ எதிரணி உறுப்பினர்கள் குழப்பிவிட்டனர். நல்லாட்சியில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, பொலிஸ்துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. சட்டம் என்பது யாவருக்கும் சமன். எனினும், எமது நாட்டில் இந்நிலைமை இன்னும் ஏற்படவில்லை.
அந்தப் பழக்கம் உருவாகவில்லை. குறிப்பாக, தாய்நாட்டுக்காக மின்சார கதிரைக்குக்கூட செல்லத் தயார் எனக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அழைப்பாணையை ஏன் இப்படி அலட்டிக்கொள்கிறார் எனத் தெரியவில்லை.
எது எப்படியிருந்தபோதிலும் எதிர்வரும் 27ஆம் திகதி '19'ஆவது திருத்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, 28இல் அது நிறைவேற்றப்படும். தடங்கல் ஏற்படுமாயின் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டிய சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்படும். அதேவேளை, 19ஐ குழப்பியடித்து காலங்கடத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சித்து வருகின்றது" - என்றார்.








