சொந்த இடங்களில் மீள்குடியேற்றுக - வேம்பொடுகேணி , முகமாலை மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பிரதேசத்தில் இன்னமும் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இத்தாவில், வேம்பொடுகேணி, முகமாலை தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை விரைவில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 1995 ஒக்ரோபர் மாதம் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறி 20 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழும் பச்சிலைப் பள்ளி மேற்குப் பிரதேச மக்களின் நலனிலும் அக்கறை கொள்ளுமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.
போர் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அப்பகுதி முழுமையாக வெடி பொருள்கள் அகற்றப்படவில்லையெனக் கூறி காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் அகதிவாழ்க்கை வாழும் பச்சிலைப்பள்ளி மேற்குப் பிரதேச மக்களின் துயர் துடைக்க அதிகாரிகள் தொடக்கம் அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
இந்த மூன்று கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஒவ்வொரு பகுதி மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் உள்ள பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாத தால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதி வாழ்க்கையே வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.








