20வது திருத்தச்சட்டமூலம் குறித்து அமைச்சரவையில் இணக்கப்பாடு இல்லை
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு ஏற்படாததால், இதுதொடர்பான முடிவு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 20வது திருத்தச்சட்ட மூலத்தை, சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகள் முன்வைத்துள்ள திருத்த யோசனைகளுடன் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்தார்.
குறித்த திருத்தங்கள் 20வது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில், இணக்கப்பாடு ஏற்படாததால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலத்தை தயாரித்த பின்னர், அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க இணக்கம் காணப்பட்டது.
இதனால், 20வது திருத்தச்சட்ட விவகாரத்தை ஆராய்வதை அமைச்சரவை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. எதிர்வரும் 20ம் நாளுக்கு முன்னதாக, இதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால், முன்னர திட்டமிட்டவாறு எதிர்வரும் 19ம் நாள் 20வது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.