புலம்பெயர் தமிழர்களை அமைதியாக்கி விட்டோம் என்கிறார் அமைச்சர் ராஜித
கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து இலங்கை அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“முன்னர், இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாக அறிக்கைகள் வெளியாகும். தமிழர்களின் பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் தீர்க்கத் தொடங்கிய பின்னர், புலம்பெயர் தமிழர்கள் அமைதியாகி விட்டனர்.
முன்னர், ஐ.நாவுக்கு அருகிலும், ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகும். இப்போது அத்தகைய அறிக்கைகளை காண முடியவில்லை. வடக்கில் இந்தவாரம் போரில் இறந்தவர்கள் நினைவாக நடத்தப்படும் நிகழ்வுகளில் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
அடுத்த வாரம் போர் வெற்றி விழா, படையினரை மட்டுமன்றி, போரில் இறந்த அனைவரையும், நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.