Breaking News

வித்தியா படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தத் தகவலை யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். ஏற்கனவே வித்தியா படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதன்பின்னர் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று புதன்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை - மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் முதல் மூன்று பேரும், பின்னர் ஐவரும் வெள்ளவத்தையில் ஒருவருமாக மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.