மீனவர் போர்வையில் கடத்தலில் ஈடுபடுவது யார்?
தமிழகத்தில், மீனவர் போர்வையில், கடத்தல் கும்பல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதில் ஈடுபடுவது யார், இவர்களுக்கு உள்ள பின்னணி என்ன என்பது குறித்து, இந்திய அரசு இரகசிய விசாரணையை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் இருந்து, 10 நாட்களுக்கு முன், மீனவர் குழு ஒன்று, இலங்கை சென்றது. இலங்கை ஜனாதிபதியிடம் பேசித் திரும்பியது.
37 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடத்தலில் தொடர்புடைய ஒருவரும், இந்த குழுவில் சென்று, ஜனாதிபதியைச் சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை அரசு, வெளியுறவுத் துறை மூலம் விசாரணை நடத்தியபோது, ´இந்திய அரசின் அனுமதி பெற்று, மீனவர் குழு வரவில்லை´ என தெரிவித்ததால், இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
´மீனவர்கள் போர்வையில், கடத்தலில் ஈடுபடுவோரை கண்டறிந்து, தடுக்க வேண்டும்´ என, தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தியது. இதுகுறித்து, இந்த நிலையில், இலங்கை சென்ற மீனவர்கள் யார், யார்? அவர்களில் கடத்தலில் ஈடுபடுபவர் யார் என்பது குறித்து, இராமேஸ்வரம், பாம்பன் உட்பட, இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில், அரசு இரகசிய விசாரணை நடத்தி வருகிறது. உளவுத்துறை விசாரணையும் நடந்து வருகிறது.
இலங்கை தூதரகமும், தன் தொடர்புகள் மூலம், மீனவர் போர்வையில் உள்ளோர், கோவை ஆசிரமம், சாமியார் தொடர்புகள், இலங்கையின் முந்தைய ஆட்சியாளர்களுடன் நெருக்கடி தொடர்பு எப்படி என்பது குறித்தெல்லாம் விசாரித்து வருவதால், பாரம்பரிய மீனவர் அல்லாத சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.