Breaking News

ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் – மகிந்த குற்றச்சாட்டு

இலங்கையில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்ன ணியில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

அம்பாறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா என்பன எனது அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் மீறல்கள் குறித்து அந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு ஆட்சி மாற்றமே தேவைப்பட்டது. எம்மை ஓரம்கட்டியதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர நீதியரசர் மொகான் பீரிஸ் நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது. ஆனாலும்,இன்னமும் இந்த விடயத்தில் மேற்குலகம் அமைதியாக இருக்கிறது.

இதே விடயத்தை நாம் செய்த போது அவர்கள் எம்மைக் குற்றம்சாட்டினர். நாம் பிரதம நீதியரசரை விசாரணை நடத்தி, நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் பதவிநீக்கம் செய்தோம். ஆனால் மொகான் பீரிஸ் பலவந்தமாக அவரது பணியகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

எனக்கும் எனது குடும்பத்தினர் மற்றும் எனது முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் சிலவற்றில், விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகமும் தொடர்புபட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.