ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் அஞ்சப்போவதில்லை - ஐ.தே.க. தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சிறுப்பான்மை அரசாங்கம் என்ற வகையில் நிறைவேற்றி காட்டியதனை போன்று நம்பிக்கையில்லாத பிரேரணையையும் தோற்கடிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் நோக்கமாக இருப்பின் பாராளுமன்றம் உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்வதே உரிய தீர்வாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத பாரியளவிலான சேவையை 100 நாட்களில் எமது அரசாங்கமே செய்தது. இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் பங்களிப்பு அளப்பரியது. இந்நிலையில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோர் தற்போது அதே சூழலை ஏற்படுத்த முனைகின்றனர். இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மீளவும் பிரதமராக்க முனைகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கும் கனவு ஒரு போதும் சாத்தியமாகாது. அது வெறுமனே பகல் கனவாகும். இந்நிலையில் தற்போது பாராளுமன்றத்தை கலைக்கும் பிரயத்தனத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக எம்மை எச்சரிக்கின்றனர்.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் நோக்கமாக இருப்பின் பாராளுமன்றம் உடனடியாக கலைத்து தேர்தலுக்கு செல்லவதே உரிய தீர்வாகும். இதனை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். நாம் அதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாத்திரமின்றி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முனைகின்றனர்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பல்வேறு இடையூறுகளை விளைவித்த மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு கும்பல் 100 நாள் வேலைத் திட்டத்தை வெற் றிகரமாக முடித்து காட்டிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முனைகின்றது.
எனவே அரசி யலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சிறுபான்மை அரசாங்கமாக வெற் றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்தோம். அதேபோன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணையையும் தோற்கடிப்போம் என்றார்.